வீட்டை அபகரிக்க முடியாததால் ஆத்திரம்: மூதாட்டி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை


வீட்டை அபகரிக்க முடியாததால் ஆத்திரம்: மூதாட்டி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை
x
தினத்தந்தி 9 March 2021 5:51 AM GMT (Updated: 9 March 2021 5:51 AM GMT)

குன்றத்தூர் அருகே வீட்டை அபகரிக்க முடியாத ஆத்திரத்தில், மூதாட்டி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார்.

போலீசில் சரண்

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (என்ற) நவரத்தினம் மணி (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு குன்றத்தூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் மூதாட்டி ஒருவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டதாக கூறி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று, கிரைண்டர் கல்லை போட்டு தலை நசுங்கி கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மலர்கொடி (70), என்பதும், இவருக்கு அகத்திலகம் என்பவருடன் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

மூதாட்டி கொலை

அகத்திலகம் தனது வீட்டில் தீராத வியாதிகளுக்கு மூலிகை மருந்து மூலம் மருத்துவம் பார்த்துள்ளார். இந்த நிலையில் அகத்திலகத்திடம் கொலையாளி மணி உதவியாளராக சேர்ந்து கொண்டு மருந்துகள் தயாரிப்பது குறித்து கற்று வந்துள்ளார்.

இதற்கிடையே மனைவி மலர்கொடி பிரிந்து சென்று விட்டதால், அந்த வீட்டிலேயே மணி தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அகத்திலகம் இறந்துவிட்டநிலையில், வீட்டை மணி தொடர்ந்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்து சில மாதங்களுக்கு முன்பு வந்த மலர்கொடி அந்த வீட்டை வெரோரு நபருக்கு ரூ.25 லட்சத்துக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மணிக்கும், மலர்கொடிக்கும் ஏற்கனவே முன்விரோதம் ஏற்பட்டு தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் வீட்டை வாங்கியவர்கள் அங்குள்ள அறைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வீட்டில் மலர்கொடி தற்காலிகமாக தங்கியிருந்தார். இதற்கிடையே வீட்டை அபகரிக்க முடியாத ஆத்திரத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த மணி, தூங்கி கொண்டிருந்த மலர்கொடி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நவரத்தின மணியை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story