தேர்தல் பணியில் ஈடுபடும் வீடியோகிராபர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க கோரிக்கை


தேர்தல் பணியில் ஈடுபடும் வீடியோகிராபர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 March 2021 4:27 PM GMT (Updated: 9 March 2021 4:27 PM GMT)

வீடியோகிராபர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க கோரிக்கை

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும்படை, 3 நிலை கண்காணிப்புக்குழு, 2 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் வீடியோகிராபர்கள் இடம்பெற்றுள்ளனர். வீடியோகிராபர்களை நியமிக்கும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் நிறுவனத்தினர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீடியோகிராபர்களை நியமிக்காமல் இருப்பதாகவும், இதனால் வீடியோகிராபர்கள் தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படை குழுவினருடன் இணைந்து செயல்படுவதில் சுணக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட வீடியோ, போட்டோகிராபர்கள் சங்கத்தினர் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு கொடுத்தனர். 
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தலில் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்களில் பணியாற்றும் வீடியோகிராபர்கள் பணியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டதை ரத்து செய்து மாநிலம் முழுவதும் அரசு பதிவு செய்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். இடைத்தரகர்கள் மூலமாக வீடியோகிராபர்களுக்கு பணி வழங்குவதை தவிர்த்து, ஒப்பந்த விதிமுறைகளை மாற்றம் செய்து தேர்தல் ஒளிப்பதிவு பணியை வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஒளிப்பதிவாளருக்கு 8 மணிநேர வேலை செய்கிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.1,500 நிர்ணயம் செய்ய வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாதபட்சத்தில் 12 ஆயிரம் வீடியோகிராபர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story