விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 9 March 2021 5:10 PM GMT (Updated: 9 March 2021 5:10 PM GMT)

வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதி நடக்கிறது. இதற்கான தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் 26-ந் தேதி மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ கொடுத்து வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்காக அவற்றை வாகனங்களில் எடுத்துச்செல்வார்கள்.
இதனை கண்காணித்து தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படை குழுக்களும், 21 நிலையான கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெயில் நிலையத்தில்....

இந்நிலையில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதற்காக அவற்றை பார்சல் மூலமாக ரெயில்களிலும் கொண்டு செல்ல நேரிடலாம் என்பதால் ரெயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முக்கிய ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ரவி, போலீசார் வீரப்பன், மணிகண்டன், சாமுண்டீஸ்வரி, சர்மிளா ஆகியோர் அடங்கிய குழுவினரும் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்ற வைகை எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன், கன்னியாகுமரி, சேது ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று ஒவ்வொரு பெட்டியாக போலீசார் தீவிர சோதனை செய்தனர். அதோடு பயணிகளின் உடைமைகளையும் மற்றும் ரெயில் நிலையத்திற்கு வந்த பார்சல்களையும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story