பதற்றமான வாக்குச்சாவடிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கூடுதல் பாதுகாப்பு


பதற்றமான வாக்குச்சாவடிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கூடுதல் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 March 2021 5:37 PM GMT (Updated: 2021-03-09T23:10:40+05:30)

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 5,76,343 ஆண் வாக்காளர்கள், 5,81,132 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,57,540 வாக்காளர்கள் உள்ளனர். 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 21,034 பேர் உள்ளனர். இத்தகைய மூத்த குடிமக்கள் நலனுக்காக அவர்களது விருப்பத்தின்பேரில் தபால் வாக்கு செலுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது மாவட்டத்தில் 1369 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற வீதம் மாவட்டத்தில் கூடுதலாக 278 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1647 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் முதற்கட்டமாக 80 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்திட ஏதுவாக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ரங்கோலி நிகழ்ச்சி

மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தலா 8 மணி நேர சுழற்சி முறையில் தொடர்ந்து 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி ரூ.36 லட்சத்து 48 ஆயிரத்து 420-ஐ கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 11 புகார்கள் வரப்பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அதேபோல 1950 என்ற தேர்தல் தகவல் தொடர்பு எண்ணிற்கு 651 அழைப்புகள் வரப்பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற நிலையை எய்திடும் நோக்கில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற ரங்கோலி நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் எவ்வித தூண்டுதலுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதைதொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக திரையிடப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், வருவாய் அலுவலர் சிவகாமி, மகளிர் திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story