செங்காநத்தம் மலையில் மீண்டும் தீ


செங்காநத்தம் மலையில் மீண்டும் தீ
x
தினத்தந்தி 9 March 2021 6:45 PM GMT (Updated: 2021-03-10T00:15:25+05:30)

செங்காநத்தம் மலையில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

வேலூர்

செங்காநத்தம் மலையில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்கும் முன்பே கடந்த மாதம் வேலூர் மூலக்கொல்லை, செங்காநத்தம் பகுதி மலையில் உள்ள செடி, புற்களை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் மலைகளில் தீ வைப்பதை தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக்குழுவினர் மலைக்குள் பொதுமக்கள் செல்வதை கண்காணிக்கும் பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் செங்காநத்தம் மலையில் நேற்று மாலை சமூக விரோதிகள் தீ வைத்துள்ளனர். வெயிலின் வெப்பத்தால் காய்ந்து காணப்பட்ட செடி, கொடி, புற்கள் தீப்பற்றி மளமளவென்று எரிந்தது. அதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. தகவலறிந்த வேலூர் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மலையில் தீ வைக்கும் தொடர் சம்பவங்களால் மலையடிவாரங்களில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மலைகளுக்கு தீ வைப்பதை தடுக்கவும், தீ வைத்து அட்டூழியம் செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரங்காபுரம், மூலக்கொல்லை பகுதிமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Next Story