சென்னை புறநகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.52 லட்சம் சிக்கியது - உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை


சென்னை புறநகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.52 லட்சம் சிக்கியது - உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 March 2021 12:00 AM IST (Updated: 11 March 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, திருவொற்றியூர், அம்பத்தூர் மற்றும் ஆவடியில் தேர்தல் பறக்கு படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.52 லட்சத்து 7 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.

தாம்பரம்,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சென்னையை அடுத்த குரோம்பேட்டை, லட்சுமிபுரம், சங்கம் சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு வாகனத்தில் பணம் எடுத்து வந்து நிரப்பிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், அவர்களிடம் விசாரணை நடத்தினார். அதில், உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து வந்து, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக எடுத்து செல்லப்பட்ட ரூ.40 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.44 லட்சத்தையும் ஆலந்தூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சுங்க இலாகா அதிகாரிகளை ஏற்றி கொண்டு நேற்று காலை ஆதம்பாக்கம் சென்று கொண்டிருந்த காரை, திருவொற்றியூர் விம்கோ நகர் சந்திப்பில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி நிலை கண்காணிப்பு குழு அதிகாரி முரளி தலைமையிலான போலீசார் மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது காரின் டிக்கியில் ரூ.3.20 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கார் டிரைவரான திருவொற்றியூர் கார்கில் வெற்றி நகரைச் சேர்ந்த ஜான் வின்சென்ட் (வயது 35) என்பவரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். காரில் பயணம் செய்த சுங்கத்துறை அதிகாரிகளும் பணம் தங்களுடையது இல்லை என்று கூறி மறுத்துவிட்டனர்.

இதனால் சந்தேகம் அடைந்த கண்காணிப்பு குழு அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் சேர்த்தனர். முறையான ஆவணங்களை சமர்பித்து, பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி, டிரைவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் மற்றும் ஆவின்பால் பண்ணை சந்திப்பில் அம்பத்தூர் மண்டல சுகாதார அலுவலரும், தேர்தல் பறக்கும்படை அதிகாரியுமான கேசவன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதிய கார் வாங்குவதற்காக அந்த கம்பெனியின் காரை ஓட்டிப்பார்த்தபடி அதே பகுதியைச் சேர்ந்த சிவன்(50) தனது மனைவியுடன் வந்தார். அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.67 ஆயிரத்து 400 இருந்தது. அதை அவர், கார் வாங்்க கொண்டு செல்வதாக கூறினார். ஆனாலும் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் பார்க் சாலை அருகே வாகன சோதனையின்ேபாது அம்பத்தூரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் கார்த்திகேயன்(49) உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 400-ஐ தாசில்தார் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் மோகனரங்கன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பூந்தமல்லியில் இருந்து ஆவடி நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.

காரில் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சங்கர்பிரசாத் உள்பட 5 பேர் இருந்தனர். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்து ஆவடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


Next Story