மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 March 2021 11:19 AM IST (Updated: 12 March 2021 11:29 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்,

சிவன் கோவில்களில் நடைபெறும் விழாக்களில் மகா சிவராத்திரி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்றிரவு மகா சிவராத்திரி விழா நடந்தது. 

நாமக்கல் தட்டாரத்தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று சிவராத்திரியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி, காலை 6 மணி என 6 கால பூஜைகள் நடந்தன. பின்னர் சாமிக்கு வில்வ இலை மற்றும் தாமரை பூவால் அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி 108 சிவலிங்கம் வைத்து சிறப்பு வழிபாடு, பூஜை நடைபெற்றது, நிகழ்ச்சியில் பீமேஸ்வரருக்கு பால், தயிர். இளநீர், திருமஞ்சனம் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 4 கால பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோவில், செல்லப்பம்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஆண்டாபுரம் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்கள் என மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story