மகா சிவராத்திரியையொட்டி சேலத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
மகா சிவராத்திரியையொட்டி சேலத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்,
சிவன் கோவில்களில் நடைபெறும் விழாக்களில் மகா சிவராத்திரி விழா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.
சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவிலில் 4 கால பூஜை நடைபெற்றது. முதல் கால பூஜை இரவு 8 மணிக்கு தொடங்கியது. உற்சவர் சுகவனேசுவரருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து 11 மணிக்கு 2-ம் கால பூஜையும், 1.30 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் சேலம் டவுன் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள சேர கிரீஸ்வரர் கோவிலில் சாமிக்கு இரவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும் மாநகரில் உள்ள சிவன் கோவில்கள் உள்பட பல்வேறு கோவில்களில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் ஸ்ரீ மலை மாதேஸ்வர கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம்.
இதில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், தமிழக பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.மாதேஸ்வரன் மலைக்கோவிலில் நேற்று நடந்த சிவராத்திரி விழாவில் தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு சோதனைச்சாவடி வெறிச்சோடியது.
Related Tags :
Next Story