காஞ்சீபுரம் மாநகரத்தின் சிறப்புகள்
காஞ்சீபுரம் மாநகரத்தின் சிறப்புகளை சங்க நூல்களான மணிமேகலை, பெரும்பாணாற்றுப்படை விரிவாக எடுத்து கூறியுள்ளது.
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் நெசவு தொழில் மற்றும் விவசாயத்தை செய்து வருகின்றனர். பாலாற்று கரையில் அமைந்துள்ள காஞ்சீபுரம் மாநகரத்தின் சிறப்புகளை சங்க நூல்களான மணிமேகலை, பெரும்பாணாற்றுப்படை விரிவாக எடுத்து கூறியுள்ளது.
இந்த பகுதி சோழர்கள், விஜயநகர பேரரசர்கள், பல்லவர்கள், மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா சிறப்புமிக்கது.
இந்த தொகுதியில் முதலியார்கள், வன்னியர்கள் அதிக அளவில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், யாதவர்கள், பிராமணர்களும் உள்ளனர்.
காஞ்சீபுரம் நகரத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பாக கீழ்கதிர்பூரில் தொடங்கப்பட்ட பட்டுப்பூங்கா 10 சதவீத பணிகள் கூட நடைபெறாமல் உள்ளது. பட்டு பூங்கா அமைக்கப்பட்டால் 10 ஆயிரம் நெசவாளர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
காஞ்சீபுரத்துக்கு அரசு நிரந்தர கொள்முதல் நிலையம் அமைத்து தரக் கோரியும், அரசே தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் காஞ்சீபுரத்திற்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும், புதிய ரெயில் நிலையத்தில் மேம்பால பணிகள் 90 சதவீதம் முடிவடைந்தும் முழுமை பெறாமல் மக்கள் பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் நகரம் ஒரு நாள் மழைக்கே தாங்காமல் கழிவுநீருடன் மழைநீரும் சேரும் நிலையில் உள்ளது. பாதாள சாக்கடைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு அனுமதிக்கப்படும் நோயாளி எந்த ஒரு மேல் சிகிச்சைக்கும் செங்கல்பட்டு அல்லது சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு அழைத்து செல்லும் சூழலில் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. காஞ்சீபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி, அரசு கலைக்கல்லூரி அமைத்து தரவேண்டும் என்பது உள்ளிட்டவை பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் போலி பட்டு சேலை விற்பனையை தடுத்திட வேண்டும். பாலாற்றில் வெங்குடி, வெங்கடாபுரம் பகுதியில் தடுப்பனை கட்ட வேண்டும், ஏரிகளை முழுமையாக தூர் வாரி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
பாலாற்று குடிநீர் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும்.
காஞ்சீபுரத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க நகரின் வெளியே கீழ்கதிர்பூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. ஊருக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி வைக்க வாகன நிறுத்துமிடம் எதுவும் இல்லாமல் உள்ளதால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது.
ரெயில்வே மேம்பாலங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
இந்த தொகுதியில் 1957-ம் ஆண்டு சி.என்.அண்ணாதுரை (தி.மு.க.), 1962-ம் ஆண்டு நடேச முதலியார் (காங்கிரஸ்), 1967-ல் என்.கிருஷ்ணன் (தி.மு.க.), 1971-ம் ஆண்டு அண்ணாமலை (தி.மு.க.), 1977-ல் கே.பாலாஜி (அ.தி.மு.க.), 1980-ம் ஆண்டு பி.வெங்கடசுப்பிரமணியன் (அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதே போன்று 1984-ம் ஆண்டு கே.பாலாஜி (அ.தி.மு.க.), 1989-ம் ஆண்டு பி.முருகேசன் (தி.மு.க.), 1991-ல் சி.பி. பட்டாபிராமன் (அ.தி.மு.க.), 1996-ல் பி.முருகேசன் (தி.மு.க.) 2001-ம் ஆண்டு எஸ்.எஸ்.திருநாவுக்கரசு (அ.தி.மு.க.) வெற்றி பெற்றுள்ளனர்.
2005-ம் ஆண்டு மைதிலி திருநாவுக்கரசு (அ.தி.மு.க.), 2006-ல் சக்தி பெ.கமலம்பாள் (பா.ம.க.) 2011-ம் ஆண்டு வி.சோமசுந்தரம் (அ.தி.மு.க.),
2016-ல் சி.பி.எம்.பி.எழிலரசன் (தி.மு.க.)வும் வெற்றி பெற்றுள்ளனர்.
காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை அ.தி.மு.க. 7 முறையும் தி.மு.க. 6 முறையும் பா.ம.க., காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்
மொத்த வாக்காளர்கள் 2,96,751
பதிவான வாக்குகள் 2,24,112
சி.வி.எம்.பி.எழிலரசன் (தி.மு.க.) 90,533
மைதிலி திருநாவுக்கரசு (அ.தி.மு.க.) 82,985
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது காஞ்சீபுரம் தொகுதியில் 2,96,751 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து 3 லட்சத்து 8 ஆயிரத்து 406 ஆக உள்ளது.
நடைபெறவுள்ள (2021) சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் மகேஷ் குமார் என்பவரும், தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் கோபிநாத், நாம் தமிழர் கட்சி சார்பில் சால்டின் ஆகியோர் களம் காண்கிறார்கள்.
Related Tags :
Next Story