உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு வந்த ரூ.99 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி


உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு வந்த ரூ.99 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 13 March 2021 11:17 AM IST (Updated: 13 March 2021 11:17 AM IST)
t-max-icont-min-icon

ஆலந்தூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப 2 வாகனங்களில் கொண்டு வந்த ரூ.99 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஆலந்தூா் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என ஆலந்தூர் தாசில்தார் ராஜேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் 2 வாகனங்கள் அந்த வழியாக வந்தன. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அந்த 2 வாகனங்களையும் நிறுத்தி விசாரணை நடத்தினா். அதோடு எந்தெந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில், எவ்வளவு பணம் நிரப்ப, எவ்வளவு பணம் எடுத்து வந்துள்ளனா்? என்பது தொடர்பாக அந்த வாகனங்களில் வந்தவர்களிடம் ஆவணங்களை கேட்டனர்.

ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு வாகனத்தில் ரூ.85 லட்சமும், மற்றொரு வாகனத்தில் ரூ.13 லட்சத்து 94 ஆயிரமும் என மொத்தமாக ரூ.98 லட்சத்து 94 ஆயிரம் இருந்தது. அந்த பணம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து ஆலந்தூர் மண்டல அலுவலகத்துக்கு கொண்டு சென்று ஆலந்தூர் தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

ஆலந்தூர் தொகுதி மண்டல பொறுப்பாளர் ராஜேந்திரன், தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி ஆகியோர் அந்த பணத்தை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்த ரூ.98 லட்சத்து 94 ஆயிரம் ஆலந்தூரில் உள்ள அரசு கருவூலத்தில் செலுத்த முடிவு செய்து உள்ளனா்.

மேலும் இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வளர்மதி, பாலன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள அகரம்தென் பிரதான சாலையில் தனியார் பல்கலைக்கழகம் அருகே தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மேடவாக்கம் நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சம் இருந்தது. இதுதொடர்பாக காரில் வந்த செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த வினோத் (வயது 30) மற்றும் வானகரம் பகுதியை சேர்ந்த ராமு (40) ஆகியோரிடம் விசாரித்தனர். ஆனால் அவர்களிடம் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் தாம்பரம் தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

Next Story