என்ஜினீயர் வீட்டில் ரூ8½ லட்சம் நகை திருட்டு


என்ஜினீயர் வீட்டில் ரூ8½ லட்சம் நகை திருட்டு
x
தினத்தந்தி 16 March 2021 6:46 PM GMT (Updated: 16 March 2021 6:47 PM GMT)

சரவணம்பட்டி அருகே என்ஜினீயர் வீட்டில் ரூ.8½ லட்சம் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சரவணம்பட்டி,

கோவை  சரவணம்பட்டி அருகே கீரணத்தம் ரெயின்போ சிட்டி பகுதியை மனோஜ் (வயது 34). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். 

இவர் தனது மனைவியின் உறவினர் வீட்டின் நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். 

ரூ.8½ லட்சம் நகை திருட்டு 

அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் அனைத்து பொருட்களும் கீழே சிதறி கிடந்தன. 

அதில் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட 26 பவுன் நகையை காணவில்லை. அதை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.8½ லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு 

இது குறித்த புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் கைவிரல் ரேகை நிபுணர்களும் அங்கு விரைந்து வந்து, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். 

மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகி உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 


Next Story