அந்தியூர் அருகே அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழா- ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
அந்தியூர் அருகே அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அந்தியூர்
அந்தியூர் அருகே அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அங்காளம்மன்
அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தில் பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் திருவிழா நடத்த அம்மனிடம் வாக்கு கேட்பார்கள். வாக்கு கிடைத்தால் மட்டுமே திருவிழா நடைபெறும். அதன்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாக்கு கிடைத்ததால் திருவிழா நடைபெற்றது. இந்தநிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த வாக்கு கேட்கப்பட்டது. அதில் உத்தரவு கிடைத்ததால் திருவிழா நடத்த கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டப்பட்டது.
மகமேறு
அன்று முதல் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க புனிதநீர் கொண்டுவந்தார்கள். இதைத்தொடர்ந்து நேற்று தேர்த்திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மகமேறு தேரில் அங்காளம்மன் உற்சவ சிலை வைக்கப்பட்டது. அதன்பின்னர் பக்தர்கள் பொதுக்கிணறு வரை தேரை தோள்களில் சுமந்து சென்றார்கள். அப்போது ஆயிரக்கணக்கான கிடாய்களை பக்தர்கள் கோவிலில் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதன்பிறகு பொதுக்கிணறு பகுதியில் இருந்து மீண்டும் தேர் கோவிலுக்கு தூக்கிவரப்பட்டது.
கிடாய் விருந்து
பின்னர் வெட்டப்பட்ட கிடாய்கள் சமைத்து அம்மனுக்கு படையலிப்பட்டது. இதில் சந்தியபாளையம், பிரம்மதேசம், காட்டுப்பாளையம், அந்தியூர், வெள்ளையன் பாளையம், தவிட்டுபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தார்கள்.
அனைவருக்கும் கிடாய் விருந்து அளிக்கப்பட்டது. விழாவையொட்டி அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.
Related Tags :
Next Story