விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை


விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 17 March 2021 7:16 PM GMT (Updated: 17 March 2021 7:16 PM GMT)

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயானக்கொள்ளை திருவிழாவும் அதனை தொடர்ந்து தேர் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டுக்கான மயானக்கொள்ளை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் (13-ந்தேதி) மயானக்கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) தேர் திருவிழா நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனவே இன்றைய தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய தினத்திற்கு பதிலாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இன்று உள்ளூர் விடுமுறையாக இருப்பினும் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்திடலாம். மேலும் கோவில் விழாவின்போது எந்தவொரு அரசியல் கட்சியோ, போட்டியிடும் வேட்பாளரோ யாதொரு அரசியல் பயன்பெறும் நோக்கில் செயல்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது. மேற்கண்ட நிபந்தனைகள் ஏதும் மீறப்பட்டால் உரிய சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. Next Story