பூந்தமல்லியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை தலைமுடியை வெட்டக்கூறி பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு


பூந்தமல்லியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை தலைமுடியை வெட்டக்கூறி பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 18 March 2021 4:12 AM IST (Updated: 18 March 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

தலைமுடியை ஏன் அதிகமாக வளர்க்கிறாய்? எனக்கூறி பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி, 

பூந்தமல்லி புதுத்தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரசாந்த் (வயது 20). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறைக்குள் தூங்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோர் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரசாந்த் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த பிரசாந்த் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பிரசாந்த் தலையில் அதிக அளவில் முடி வளர்த்து வந்ததாகவும், ஏன் இவ்வளவு முடி வளர்க்கிறாய்? அதனை வெட்ட வேண்டியது தானே? என பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தலைமுடியை ஏன் வெட்டவில்லை? என பெற்றோர் திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story