கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து பெண் கொலை 10 பவுன் நகைக்காக காவலாளி வெறிச்செயல்


கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து பெண் கொலை 10 பவுன் நகைக்காக காவலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 21 March 2021 12:15 AM GMT (Updated: 2021-03-21T05:45:37+05:30)

வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டு, கழுத்தை அறுத்து கொலை செய்த காவலாளி, 10 நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் 5-வது பிரதான சாலையை சேர்ந்தவர் ரவி (வயது 52). இவர், சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியராக உள்ளார். இவருடைய மனைவி கலா (47). இவர்களுடைய மகன் உமேஷ், புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் இவர்களது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவர் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கி காவலாளியாகவும், வீட்டு வேலைகளையும் செய்து வந்தார்.

நேற்று மாலை ரவி, தனது மனைவி கலாவுக்கு போன் செய்தார். நீண்டநேரம் ஆகியும் அவர் போனை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர், வீட்டுக்கு வந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, தனது மனைவி கலா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டு வேலைக்கு சேர்ந்து இருந்த ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை காணவில்லை. கலாவின் கழுத்தில் கிடந்த நகையும் மாயமாகி இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் கொலையான கலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், 15 நாட்களுக்கு முன்பு புதிதாக காவலாளி வேலைக்கு சேர்ந்த ராகேஷ், கலா வீட்டில் உள்ள நகைக்கு ஆசைப்பட்டு, வீட்டில் தனியாக இருந்த கலாவின் கை, கால்களை கட்டிப்போட்டு, அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, கலா கழுத்திலும், வீட்டின் பீரோவிலும் இருந்த மொத்தம் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டது தெரிந்தது.

இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்துடன் தப்பி ஓடிய காவலாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story