மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பரஞ்ஜோதி வாக்குறுதி


மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பரஞ்ஜோதி வாக்குறுதி
x
தினத்தந்தி 21 March 2021 4:02 AM GMT (Updated: 21 March 2021 4:02 AM GMT)

கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க முயற்சி எடுப்பேன் மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பரஞ்ஜோதி வாக்குறுதி.

திருச்சி, 

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்ஜோதி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார். இந்நிலையில், சமயபுரம் பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 1 முதல் 15 வரை திறந்த ஜீப்பில் சென்றும், வீதி, வீதியாக நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் வாக்காளர்களுக்கு மத்தியில் வாக்குறுதி அளித்து பேசியதாவது:-

அய்யம்பாளையம், ஆம்பூர், குணசீலம், ஏவூர் ஊராட்சிகளில் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில், காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க முயற்சி எடுப்பேன். காவிரி உப்பாறு நீர்த்தேக்கம் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ஏழை, எளிய மாணவ-மாணவிகள் குறைந்த கட்டணத்தில் கல்வி பயிலும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க பாடுபடுவேன். விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று நொச்சியத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு செல்வதற்கு வசதியாக கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க முயற்சி எடுப்பேன். இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டு பன்முக திறமை உடைய விளையாட்டு மைதானம் அமைக்க முயற்சி எடுப்பேன். சிறுகனூரில் அரசு மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு எளிதாக செல்லும் வகையில் அங்குள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி எடுப்பேன். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடந்து வரும் பக்தர்களின் வசதிக்காக நடைபாதை அமைக்க முயற்சி எடுப்பேன் இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தில் வேட்பாளர் பரஞ்ஜோதியுடன் முன்னாள் அமைச்சர்கள் அண்ணாவி, டி.பி.பூனாட்சி, சிறுபான்மையினர் நல மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமே‌‌ஷ், நகர செயலாளர்கள் துரை சக்திவேல், சம்பத், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் பிரின்ஸ் மற்றும் த.மா.கா.வினர் உடன் சென்றிருந்தனர்.

Next Story