திருவள்ளூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனு நிராகரிப்பு


திருவள்ளூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனு நிராகரிப்பு
x
தினத்தந்தி 21 March 2021 11:14 AM GMT (Updated: 2021-03-21T16:44:06+05:30)

திருவள்ளூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் மனு நிராகரிப்பு
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் உள்பட 27 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் எஸ்.தணிகைவேல் வேட்பு மனுவை பூர்த்தி செய்ததில் ஏற்பட்ட குளறுபடியால் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் உள்பட 16 பேர் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 11 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

சென்னை புறநகர் பகுதியில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் பிரதான அரசியல் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களின் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன. சுயேச்சைகள், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டது.

பா.ம.க. மனுவில் குளறுபடி
அதன்படி பூந்தமல்லி தனி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 16 மனுக்கள் ஏற்கப்பட்டது. 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ.வான பா.ம.க. வேட்பாளர் ராஜமன்னார், பென்சன் பெறுவதை மனுவில் குறிப்பிடவில்லை. அவரது வாக்கு தூத்துக்குடியில் உள்ளது. அதனை பூந்தமல்லியில் இருப்பதுபோல் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அவரது வேட்பு மனுவில் இதுபோன்ற குளறுபடி இருப்பதால் தள்ளுபடி செய்யும்படி தி.மு.க. சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தனர். வேட்புமனு சரிபார்க்கப்பட்ட பிறகு பா.ம.க. வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

ஆலந்தூர்
ஆலந்தூர் தொகுதியில் மொத்தம் 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில், 27 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 21 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஆவடி தொகுதியில் மொத்தம் 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 20 மனுக்கள் ஏற்கப்பட்டு, 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

தாம்பரம் தொகுதியில் மொத்தம் 26 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 21 மனுக்கள் ஏற்கப்பட்டு, 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

பல்லாவரம் தொகுதியில் மொத்தம் 35 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 21 மனுக்கள் ஏற்கப்பட்டு, 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

மதுரவாயல் தொகுதியில் மொத்தம் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 20 மனுக்கள் ஏற்கப்பட்டு, 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

அம்பத்தூர் தொகுதியில் மொத்தம் 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 23 மனுக்கள் ஏற்கப்பட்டு, 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

மாதவரம் தொகுதியில் மொத்தம் 33 பேர் மனு தாக்கல் செய்ததில் 20 மனுக்கள் ஏற்கப்பட்டு, 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

சுயேச்சை வேட்பாளர் தர்ணா
திருவொற்றியூர் தொகுதியில் மொத்தம் 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 22 மனுக்கள் ஏற்கப்பட்டு, 10 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.அப்போது அங்கு வந்த சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த கோ.பிரவீனா என்ற பெண், வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் முத்திரைத்தாள் 100 ரூபாய்க்கு வைக்கவேண்டும். ஆனால் அனைவரும் 20 ரூபாய்க்கு மட்டுமே வைத்து உள்ளனர். எனவே தேர்தல் விதிமுறைக்கு புறம்பாக மனுதாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மறு பரிசீலனை நடந்த கூடத்தில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். வெளியே வந்த அவர் மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தி.மு.க.வினர் முற்றுகை
பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் வேட்பு மனுவில், முன்மொழிபவர் ஆதார் எண் குறிப்பிடவில்லை. இதனால் அவரது வேட்பு மனு பின்னர் பரிசீலிக்கப்படும் என தேர்தல் அலுவலர் நிறுத்தி வைத்தார்.மதியம் 2 மணி அளவில் தேர்தல் அதிகாரி, மீண்டும் அவரது வேட்புமனுவை பரிசீலனை செய்தபோது முன்மொழிபவர் ஆதார் அட்டை நகல் கையொப்பமிட்டு பின்பக்கத்தில் வேட்புமனு கோப்பில் இணைக்கப்பட்டு இருந்ததை அறிந்து என்.ஆர்.தனபாலன் வேட்புமனு ஏற்று கொள்ளப்படுவதாக அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள பெரம்பூர் சட்டமன்ற தேர்தல் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது சென்னை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் வேட்பாளர் என்.ஆர்.தனபால் மற்றும் அக்கட்சியினர் அங்கு வந்தனர். அ.தி.மு.க-தி.மு.க.வினர் அங்கு ஒன்று திரண்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Next Story