திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகர் வையாபுரி பிரசாரம்


திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகர் வையாபுரி பிரசாரம்
x
தினத்தந்தி 21 March 2021 12:34 PM GMT (Updated: 2021-03-21T18:04:17+05:30)

திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகர் வையாபுரி பிரசாரம் செய்தார்.

ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகர் வையாபுரி பிரசாரம் செய்தார்.
நடிகர் வையாபுரி பிரசாரம்
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக  வேட்பாளராக கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் வையாபுரி நேற்று ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரத்தில் பிரசாரம் செய்தார். வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து ராஜமன்யபுரம், வடக்கு சுப்பிரமணியபுரம், திசைகாவல் தெரு, பூவரசூர், காந்தி தெரு, மெயின் பஜார் ஆகிய பகுதிகளில் நடந்து சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அதிமுக  அரசின் சாதனைகளை கூறி ஆதரவு திரட்டினர்.
பிரசாரத்தின்போது நடிகர் வையாபுரி கூறியதாவது:-
நல்லாட்சி தொடர...
மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர்., ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். இதே நிலை நீடிக்க வேண்டும். தற்போது எத்தனையோ புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் வந்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நீர்நிலைகளில் மேற்கொண்ட குடிமராமத்து திட்டத்தால், அனைத்து குளங்களும் நிரம்பி, விவசாயம் செழித்துள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இதுவரையிலும் எந்த அரசும் செய்யாத வகையில், விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழுவினரின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மேலும் புதிதாக ஏராளமான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே அதிமுகவின் நல்லாட்சி தொடர, அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, இளைஞரான கேஆர்எம் ராதாகிருஷ்ணனை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற...
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்தால், என்றும் மக்களுடன் இருந்து மக்களுக்காக தொண்டாற்றுவேன். உடன்குடி அனல் மின் நிலையம், கல்லாமொழி நிலக்கரி இறங்குதளம் ஆகியவற்றில் பணியாற்றுவதற்கு திருச்செந்தூர் தொகுதி இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஏற்பாடு செய்வேன்.
திருச்செந்தூர் தொகுதி முழுவதும் விவசாயத்தை சார்ந்துள்ளதால், அனைத்து குளங்களையும், கால்வாய்களையும் தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்துவேன். இதன் மூலம் நீர்பிடிப்பு பகுதிகளை அதிகப்படுத்தி விவசாயம் செழிக்க ஏற்பாடு செய்வேன். நீர்நிலைகளில் கரையோரம் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
அனைத்து பகுதிகளிலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவேன். அனைத்து தெருக்கள், பஜார் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ஏற்பாடு செய்வேன். தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றுவேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் வேண்டிய அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிைம அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
பின்னர் காயல்பட்டினத்தில் அதிமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. நகர செயலாளர் காயல் மவுலானா தலைமை தாங்கினார். துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கண்ணன், மகளிரணி செயலாளர் சமுத்திரகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
காயல்பட்டினத்தில் அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். அதற்கான வழிமுறைகள் வகுத்து தரப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு வார்டிலும் தினமும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க, பொதுமக்களிடம் நேரில் சென்று தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றி எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வணிகர்களிடம் ஆதரவு
முன்னதாக ஆத்தூர் பஜாரில் நடிகர் வையாபுரி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். கடைகள்தோறும் சென்று வணிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களிடமும் வாக்கு சேகரித்தார்.அதிமுகவின் நல்லாட்சி தொடர ஆதரவு தாருங்கள் என்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Next Story