மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைவு எதிரொலி: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைவு எதிரொலி: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 21 March 2021 4:01 PM GMT (Updated: 2021-03-21T21:31:33+05:30)

மூலவைைக ஆற்றில் நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.


கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியத்தில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த அனைத்து கிராமங்களுக்கும் மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் போதியளவு மழை இல்லை. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. 
தற்போது கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.
 எனவே இன்னும் சில நாட்களில் மூலவைகை ஆறு வறண்டு விடும் நிலை உள்ளது. மேலும் கோடை காலம் தொடங்க உள்ளதால் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. 

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

இதனால் மூல வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்படும் வரை உறை கிணறுகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கிராமங்களில் குடிநீர் தேவை 2 மடங்காக உயர்ந்துள்ளது. 
இதன் காரணமாக உறை கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 

எனவே கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்பு அனைத்து கிராமங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 மேலும் கிராமங்களில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Next Story