திருவெறும்பூர் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க பாடுபடுவேன் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் பேட்டி


திருவெறும்பூர் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க பாடுபடுவேன் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் பேட்டி
x
தினத்தந்தி 22 March 2021 4:43 AM GMT (Updated: 22 March 2021 4:43 AM GMT)

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொது செயலாளர் பொறியாளர் முருகானந்தம் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது.

திருச்சி, 

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. வளர்ச்சி திட்டங்கள் எதனையும் செய்யவில்லை. 6 முறை இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க. இருந்துள்ளது. அவர்களும் எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை. நான் 16 வயது முதல் இந்த தொகுதி மக்களுக்காக சமூக சேவையில் ஈடுபட்டு உள்ளேன். என்னை சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மக்கள் தேர்வு செய்தால், தொகுதியில் உள்ள 25 வயதுக்குட்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வாங்கிக் கொடுக்க பாடுபடுவேன். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலை கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது. பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14 கி.மீ. சர்வீஸ் சாலையை பொறுத்தவரை சர்வீஸ் சாலை வேண்டும் என கூறுபவர்களும், உயர்மட்ட பாலம் தான் வேண்டும் என கேட்பவர்களும் பாதிக்காத வகையில் ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்துவேன். 

சட்டமன்ற தொகுதியில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு கழிப்பறை அமைக்க முயற்சி செய்வேன். நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் மாதம் ஒரு முறை அனைத்து ஊராட்சிகளுக்கும் நேரடியாக சென்று மக்களை நேரடியாக சந்திப்பேன். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு இலவச திட்டங்களை அறிவித்து உள்ளனர். ஆனால் அதையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் இலவசங்களை புறந்தள்ளிவிட்டு மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளர்களை தமிழகம் முழுவதும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story