புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் 4 மாதங்களுக்கு பிறகு இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.
புதுச்சேரி,
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஊடுருவிய கொரோனா தொற்று நவம்பர், டிசம்பர் மாதங்களில் கட்டுக்குள் வந்தது. இதனால் பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது. இத்துடன் கொரோனா தொற்று நீங்கிவிடும் என்று மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. புதுச்சேரியிலும் அதன் பாதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 47 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று தொற்று எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இது மட்டுமல்லாது புதுச்சேரியில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அங்கு தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 645 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் புதுச்சேரியில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 676 ஆக உள்ளது. தொற்று பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்று பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணிவது, பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
Related Tags :
Next Story