சைதை துரைசாமிக்கு ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு ‘மக்கள் மேயராக சிறப்பாக பணியாற்றியவர்'


சைதை துரைசாமிக்கு ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு ‘மக்கள் மேயராக சிறப்பாக பணியாற்றியவர்
x
தினத்தந்தி 27 March 2021 7:38 PM IST (Updated: 27 March 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

சைதை துரைசாமிக்கு இரட்டை இலை சின்னத்துக்கு ஜி.கே.வாசன் நேற்று வாக்கு சேகரித்தார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஜாபர்கான்பேட்டை கங்கையம்மன் கோவில் அருகே நேற்று பிரசாரம் மேற்கொண்டார். சைதை துரைசாமிக்கு ‘இரட்டை இலை' சின்னத்துக்கு ஆதரவு திரட்டி ஜி.கே.வாசன் பேசியதாவது:-

சைதை துரைசாமி என்று சொன்னாலே தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டு அன்பு பாராட்டு பெற்றவர். சென்னை மாநகராட்சியில் மக்கள் மேயராக சிறப்பாக பணியாற்றியவர். மனிதநேய மையத்தை நடத்தி வரும் மனிதநேயர். சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும், அனைத்து துறைகளும் வளர, சிறக்க வேண்டும் என்றால் மனசாட்சியின்படி சைதை துரைசாமிக்கு வாக்களிக்க வேண்டும். நல்ல மனிதரான அவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினால் அது சட்டமன்றத்துக்கு நல்லது. மக்களுக்கும் நல்லது. வளர்ச்சி அடைந்து சென்னை மாநகராட்சி மிக சிறப்பாக செயல்படுவதற்கு அடித்தளமிட்டவர் அவர். சைதை துரைசாமி வெற்றி பெற்றால் மாநகராட்சியின் திட்டங்கள் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு அடித்தளமாக அமையும்.

சைதை துரைசாமியின் அணுகுமுறை, பண்பு, அறிவார்ந்த விஷயங்களை நன்கு அறிந்து சென்னை மாநகராட்சியின் முதல் அ.தி.மு.க. மேயர் என்ற பொறுப்பை ஜெயலலிதா கொடுத்தார்.

சைதை துரைசாமி வெற்றிக்கு பின்னர் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர போகிறது. கருத்து கணிப்புகளை யாரும் நம்ப வேண்டாம். மக்கள் கணிப்புகளை நம்புங்கள்.

சைதை துரைசாமி வெற்றி பெற்று விடுவார். அவர் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற போகிறார் என்பது தான் போட்டி. தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சைதை துரைசாமியை நீங்கள் வெற்றி அடைய செய்ய வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்களுக்கு அதிக திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு விலையில்லா 6 சிலிண்டர்கள், மாதம் ரூ.1,500 உதவித்தொகை, சோலார் அடுப்பு போன்ற நலத்திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் வழங்கப்பட இருக்கிறது. நல்லவர்கள் கையில் ஆட்சி போக வேண்டும். பொல்லாதவர்கள் கையில் ஆட்சி போக கூடாது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாஷிங்மெஷின் அறிவித்துள்ளார்கள். இதற்கு தண்ணீர் முக்கியம். தற்போது தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல், மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. எனவே ராசிக்காரர்கள் ஆட்சி தொடர வேண்டும். ராசி இல்லாதவர்கள் ஆட்சிக்கு வர கூடாது. ஆடம்பரம் இல்லாத, சொன்னதை செய்யும் ஆட்சி தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது சைதை துரைசாமி ஒரு பெண் குழந்தைக்கு கலையரசி என்று பெயர் சூட்டினார். பிரசாரத்துக்கு வருகை தந்த ஜி.கே.வாசனுக்கு மாவட்ட தலைவர் சைதை மனோகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story