பா.ஜ.க. வேட்பாளரை சிறைப்பிடித்ததால் பரபரப்பு தி.மு.க.-பா.ஜ.க.வினர் மோதல்; 2 பேர் கைது
சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை தி.மு.க. வினர் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர்,
வருகிற சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளராக வினோஜி பி.செல்வம் என்பவர் போட்டியிடுகிறார். தி.மு.க.சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ., பி.கே.சேகர் பாபு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் நேற்று முன்தினம் இரவு கொண்டித்தோப்பு கிருஷ்ணமூர்த்தி தெருவில் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் பின்னர், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பா.ஜ.க. வினரை விருந்து உபசரிப்புக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பா.ஜ.க.வினர் பணம் பட்டுவாடா செய்ய சென்றதாக கூறி தி.மு.க.வினர் அங்கு திரண்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த பா.ஜ.க. வேட்பாளர் வினோஜி பி.செல்வத்தை பூட்டி வைத்து தி.மு.க.வினர் சிறைப்பிடித்ததாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதனால் அங்கு பா.ஜ.க. வினருக்கும், தி.மு.க.வினருக்கு இடையே திடீர் மோதல் உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறு உண்டானதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதில் தி.மு.க.வினர் தங்களை தாக்கியதாக பா.ஜ.க.வேட்பாளர் வினோஜி பி.செல்வம் ஏழுகிணறு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அதன்பேரில், தி.மு.க.வைச் சேர்ந்த சங்கர் (வயது 46), ஆனந்த் (34) ஆகிய இருவரையம் போலீசார் நேற்று கைது செய்து, ஜார்ஜ் டவுன் கோர்ட்டு உத்தரவின்பேரில் வரும் 9-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story