கரூர் நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை கட்டித்தரப்படும்; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி


கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது
x
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது
தினத்தந்தி 30 March 2021 6:30 AM GMT (Updated: 30 March 2021 6:30 AM GMT)

கரூர் நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை கட்டித்தரப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்தார்.

வாக்கு சேகரிப்பு
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று பாரதிதாசன் தெரு, அண்ணா தெரு, காமராஜ் தெரு, வெங்கமேடு புளியமரம் பஸ் நிறுத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கைத்தறி நெசவாளர்களிடம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தறி நெய்து வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

பாதாள சாக்கடை திட்டம்
கரூரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்போது உள்ள பஸ் நிலையம் நகர பஸ்களுக்கும், தொலைதூர பஸ்களுக்கு தனியாக கூடுதல் புறநகர் பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்படும். பழைய காமராஜ் மார்க்கெட் கட்டிடம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்த கூடிய வசதியுடன் கூடிய புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். கரூர் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். கரூர் வணிக பெருமக்களின் கோரிக்கையை ஏற்று தினமும் சேலத்தில் இருந்து சென்னைக்கு இயங்கி கொண்டிருக்கும் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலை, கரூர் 
ரெயில் நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதற்கு உண்டான பணிகள் கரூர் ரெயில்வே சந்திப்பில் நடைபெற்று வருகிறது. உணவு பதப்படுத்தும் பூங்கா வர நடவடிக்கை எடுக்கப்படும். கரூர்-சென்னை பகல் நேர ரெயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story