மின்சாரம் தாக்கி ராணுவ வீரர் சாவு
இரணியல் அருகே மின்சாரம் தாக்கி ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே மின்சாரம் தாக்கி ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ராணுவ வீரர்
இரணியல் போலீஸ் சரகம் மணக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மது (வயது 38), அரியானா மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் மது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். நேற்றுமுன்தினம் இரவு அவர், சித்தப்பா மகன் திருமணத்துக்கான வாழை தோரணம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ததாக தெரிகிறது.
மின்சாரம் தாக்கி சாவு
அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக வாழை தோரணம் சாய்ந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால் மின்கம்பியும், வாழை தோரணமும் மதுவின் மீது பட்டதால் அவரை மின்சாரம் தாக்கியது.
உடனே அவரை ஆபத்தான நிலையில் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மரியாதையுடன்...
மின்சாரம் தாக்கி பலியான ராணுவ வீரரின் மனைவி ஸ்ரீதேவி, மணிமுத்தாறில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தையும், 8 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மதுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான மணக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது.
Related Tags :
Next Story