ஓமலூர், ஆத்தூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல் 1,800 டீ-சர்ட்டுகளும் சிக்கின


ஓமலூர், ஆத்தூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல் 1,800 டீ-சர்ட்டுகளும் சிக்கின
x
தினத்தந்தி 1 April 2021 4:55 AM IST (Updated: 1 April 2021 4:55 AM IST)
t-max-icont-min-icon

பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்

ஓமலூர்:
ஓமலூ், ஆத்தூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓமலூர்
ஓமலூரை அடுத்த தாத்தியம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே ஓமலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சேலத்தை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில், உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சம் வைத்திருப்பது தெரிய வந்தது. 
இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெங்களூரு பகுதியை சேர்ந்த சையத் (வயது 25) என்பதும், சேலம் கொண்டலாம்பட்டியில் பட்டு சேலை வாங்க பணத்தை எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை குழுவினர், அந்த பணத்தை ஓமலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா பிரியாவிடம் ஒப்படைத்தனர்.
ஆத்தூர்
ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் சோதனைச்சாவடியில் பறக்கும் படை அலுவலர் வசந்தன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் சேலத்தாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 48), என்பவர் ரூ.54 ஆயிரத்து 500 உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் அலுவலர் துரையிடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
டீ-சர்ட்டுகள்
ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக் ராஜன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.  அதில், 1,800 டீ-சர்ட்டுகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த மாது என்பதும், அங்கிருந்து டீ-சர்ட்டுகளை சென்னை, திருப்பூருக்கு எடுத்து செல்வதும் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் டீ-சர்ட்டுகளை பறிமுதல் செய்து, ஓமலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா பிரியாவிடம் ஒப்படைத்தனர்.

Next Story