மக்கள் விரும்பும் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு


மக்கள் விரும்பும் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2021 9:37 AM IST (Updated: 1 April 2021 9:37 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் விரும்பும் அ.தி.மு.க. நல்லாட்சி மீண்டும் மலரும் என்று பிரசார கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

 திண்டுக்கல், 

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நாகல் நகர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது சவுராஷ்டிரா சமூக முக்கிய பிரமுகர்கள், மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பழனி பைபாஸ் ரோட்டில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-அறிஞர் அண்ணா தொடங்கிய தி.மு.க. தற்போது ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. தந்தை, மகன், பேரன் என மன்னராட்சியை தி.மு.க. நினைவுப்படுத்தி கொண்டிருக்கிறது. தி.மு.க.வின் கொள்கையே கொள்ளையடிப்பது மட்டும்தான். ஊழலை பற்றி பேச அங்குள்ள யாருக்கும் அருகதை கிடையாது. 

கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ரவுடித்தனம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற கட்சி தி.மு.க.தான். எங்கேயாவது அ.தி.மு.க.வினர் மக்களை, அதிகாரிகளை மிரட்டி இருக்கிறார்களா? என்று கூறுங்கள்.

நாளுக்குநாள் தி.மு.க. கரைந்து வருகிறது. அங்குள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலோடு அந்த கட்சி இல்லாமல் போய்விடும். ஆட்சியில் இல்லாமலேயே அரசு அலுவலர்களை செந்தில்பாலாஜி மிரட்டுகிறார். அ.தி.மு.க. ஆட்சியை குறை சொல்ல முடியவில்லை. தி.மு.க.வின் ஒரே சாதனை ஊழல் மட்டும்தான் என்பது மக்களுக்கு தெரியும். இனி ஆட்சி அமைப்பது கடினம் என்ற முடிவு வந்துவிட்டதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், வாய்க்கு வந்தபடி தி.மு.க.வினர் பேசுகின்றனர். 

துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதல்&அமைச்சரின் தாயாரை தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அவரை தி.மு.க. கூட்டணி கட்சியினர் யாரும் கண்டிக்கவில்லை. இதேபோல் வேறு யாராவது பேசி இருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் இறங்கி இருப்பார்கள். இப்போது ஏன் நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை பார்த்து கேட்கிறேன். 

இதுபோன்ற தரம் தாழ்ந்த விமர்சனம் ஏன் செய்கிறீர்கள். இதைத்தவிர வேறு எதுவும் உங்களுக்கு தெரியாதா?. தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இவர் என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் புரியாது. 2, 3 படங்களில் நடித்த இவர் அரசியலில் நடிக்க வந்து விட்டார். 

அரசியலை பற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தெரியும். நீங்கள் எல்லாம் பேசி மக்கள் கேட்பார்களா?. உங்கள் தாத்தா, தந்தை செய்த அட்டூழியத்தை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் இனியும் அந்த கட்சியில் இருந்தால் உங்களுக்கு மரியாதை இருக்காது. உடனடியாக அ.தி.மு.க.வில் இணைந்து கொள்ளுங்கள். அப்போது தான் பெண்கள் உங்களை மதிப்பார்கள்  

வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனசாட்சியுடன் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை அ.தி.மு.க. ஆட்சியால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்துள்ளனர். இதனால் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். 
மக்கள் விருப்பப்படி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மலரும். மக்கள் நலத்திட்டங்கள் தொடரும். தி.மு.க. தேர்தல் அறிக்கை எல்லாம் வெற்று வாக்குறுதிகள். அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. அதனை நிறைவேற்றப்போவதும் இல்லை. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே கதாநாயகனாக திகழ்கிறது.

விலையில்லா வாஷிங்மிசின், கேபிள் இணைப்பு, வருடத்துக்கு 6 சிலிண்டர்கள், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை போன்ற எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள் உள்ளன. இதனை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு மட்டும் போட்டு பாருங்கள்.  வருகிற 5 ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். 

அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் உங்கள் வாழ்வு வளமாகும். தமிழகத்தில் அமைதி நிலவும். இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
பிரசாரத்தில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story