சுயஉதவிக்குழுவினரின் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படும் ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதி


சுயஉதவிக்குழுவினரின் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படும் ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதி
x
தினத்தந்தி 1 April 2021 9:50 AM IST (Updated: 1 April 2021 9:50 AM IST)
t-max-icont-min-icon

சுயஉதவிக்குழுவினரின் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதி அளித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  நேற்று அவர், ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட நெடுவாக்கோட்டை, கோவிலூர், தெலுங்கன்குடிகாடு, உறந்தைராயன்குடிகாடு, புலவன்காடு, பேய்க்கருப்பன்கோட்டை, வெள்ளூர், பாப்பாநாடு, ஆம்பலாப்பட்டு தெற்கு, முள்ளூர்பட்டிக்காடு, ஆம்பலாப்பட்டு வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றும், பல இடங்களில் நடந்து சென்றும் மக்களை சந்தித்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவரை, பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற அமைச்சர்களில் ஒருவனாக இருந்ததால் தான் இப்பகுதியில் வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி போன்றவை கொண்டு வரப்பட்டது. தஞ்சை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுபோன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தேன்.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஒரு குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். சுயஉதவி குழுவினர் கடன், கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு கேபிள் டி.வி. இணைப்பு விலையில்லாமல் வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கியது போல் இந்த முறை வா‌ஷிங்மி‌ஷின் வழங்க உள்ளோம்.

ஒரத்தநாடு தொகுதி மாணவ, மாணவிகள் குரூப் தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாக ஒரத்தநாட்டில் எனது சொந்த செலவில் பயிற்சி மையம் அமைக்கப்படும். சிட்கோ தொழிற்பேட்டை ஒரத்தநாட்டில் அமைக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளருடன் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். ஒரத்தநாடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட இனாத்துக்கான்பட்டி கிராமத்திற்கு அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அவரை, பெண்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் பெண்கள் பலர் கோலாட்டம் ஆடுவதற்கு தயாராக இருந்தனர். உடனே வைத்திலிங்கம் கோலாட்ட குச்சிகளை வாங்கி, கோலாட்டம் ஆடி வாக்குசேகரித்தார்.

Next Story