என்மீது கூறும் குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்னிலையில் மேடை போட்டு விவாதிக்க தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்


என்மீது கூறும் குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்னிலையில் மேடை போட்டு விவாதிக்க தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்
x
தினத்தந்தி 1 April 2021 9:33 PM GMT (Updated: 1 April 2021 9:33 PM GMT)

என்மீது கூறும் குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்னிலையில் மேடை போட்டு விவாதிக்க தயாரா? என்று பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.

என்மீது கூறும் குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்னிலையில் மேடை போட்டு விவாதிக்க தயாரா? என்று பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.
முதல்-அமைச்சர் பிரசாரம்
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஓட்டுகள் கேட்டு வருகிறார். 4-வது கட்டமாக நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டுகள் கேட்டு பிரசாரம் செய்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளர் எம்.யுவராஜா, ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார், பவானி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.சி.கருப்பணன், அந்தியூர் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் கே.எஸ்.சண்முகவேல், கோபி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அ.பண்ணாரி ஆகிய 7 பேருக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும், மொடக்குறிச்சி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் சி.சரஸ்வதிக்கு தாமரை சின்னத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஓட்டுகள் கேட்டு தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டாலின் கனவு பலிக்காது
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறாது. இந்த தேர்தலுடன் அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று அவதூறாக பிரசாரம் செய்து வருகிறார். ஸ்டாலின் அவர்களே. இங்கே பெருந்துறையில் வந்து பாருங்கள். அ.தி.மு.க. எப்படிப்பட்ட வலிமையான இயக்கம் என்பதையும், எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணி என்பதையும் தெரிந்து கொள்வீர்கள்.
புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் வாரிசுகளாக கொங்கு மண்டல அ.தி.மு.க.வினர் உள்ளனர். ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற முடியாது. இங்கு கட்சியினரும், பொதுமக்களும் கடுமையாக உழைக்கிறார்கள். அ.தி.மு.க.தான் எப்போதும் வெற்றி பெறும் என்று முடிவு செய்து விட்டார்கள்.
இனி ஸ்டாலினின் கனவு எப்போதும் பலிக்காது. அவர் ஆட்சி அமைக்கும் கனவை வீழ்த்தி அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். கொங்கு மண்டலத்தில்  இந்த பகுதியில் இருந்து முதல்-அமைச்சராக நான் தேர்ந்து எடுக்கப்பட்டவன். நான் முதல்-அமைச்சர் ஆகி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டு இருந்தார். அதை ஏற்று நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது, சட்டமன்றத்திலேயே எனது மேஜை மீது ஏறி நின்று தி.மு.க.வினர் நடனம் ஆடினார்கள். புத்தகங்களை என்மீது வீசினார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பே அது நடந்தது. சட்டம் இயற்றும் மிகப்புனிதமான சட்டமன்றத்திலேயே அராஜகம் செய்தவர்கள் தி.மு.க.வினர்.
சவால்
அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்ததாக யாரோ எழுதிக்கொடுத்தவற்றை படித்துக்கூட பார்க்காமல் கவர்னரிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். தவறான குற்றச்சாட்டுகளை அவர் வைத்து இருக்கிறார். அந்த புகாரில் கூறப்பட்டு உள்ள ரோடு பணிக்கு டெண்டர் விடவில்லை. நிதியும் ஒதுக்கவில்லை. எப்படி ஊழல் செய்ய முடியும். இதுபற்றி நேரில் விவாதிக்கலாம் என்று பல முறை கூறிவிட்டேன். ஆனால் ஸ்டாலின் பதில் கூறவில்லை.
இப்போது இந்த பெருந்துறையில் வைத்து நான் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். பொதுமக்கள் முன்னிலையில் மேடை போட்டு விவாதிக்கலாம். என் மீது கூறும் குற்றச்சாட்டு, எந்த சந்தேகத்துக்கும் நான் பதில் அளிக்கிறேன். மக்கள் அதைக்கேட்டு நீதி வழங்கட்டும். அப்போது தி.மு.க. செய்த தவறுகளையும் நான் பட்டியல் இடுகிறேன். ஸ்டாலின் அதற்கு பதில் கூற முடியுமா?. முதல்-அமைச்சராகிய எனக்கோ, அமைச்சர்களுக்கோ, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என யாருக்கும் எங்கள் மடியில் கனமில்லை. இதனால் வழியில் பயமில்லை. துணிச்சல் இருந்தால் ஸ்டாலின் விவாதத்துக்கு வருவாரா?.
யாரோ எழுதிக்கொடுத்ததை அப்படியே படிக்காமல் கொடுத்து விட்டார். ஆனால் நான் அப்படி இல்லை. எல்லா கோப்புகளையும் படித்து பார்த்துதான் கையெழுத்து போடுவேன்.
நலத்திட்டங்கள்
ஸ்டாலின் செல்லும் இடங்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் திட்டங்கள் நடக்கவில்லை என்று கூறி வருகிறார். எத்தனையோ நலத்திட்டங்கள் செய்து இருக்கிறோம். அதில் இந்த மாவட்டத்துக்கு நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களை கூறுகிறேன். 61 அம்மா மினி கிளினிக், மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் 22 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பு, 7 பேருக்கு பல் மருத்துவர் படிப்பு என்று 29 பேருக்கு மருத்துவ படிப்பு. அவர்களுக்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது.
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இந்த மாவட்ட மக்களுக்கு வறட்சி நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. பயிர்காப்பீடு திட்டம் மூலம் அதிக தொகையை தமிழ்நாடு பெற்றுக்கொடுத்து இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இன்று (அதாவது நேற்று) முதல் விவசாயிகளுக்கு தடையில்லாத மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. இனி எந்த நேரமும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும்.
50 ஆண்டு கால கனவுத்திட்டம் அத்திக்கடவு -அவினாசி திட்டம் ரூ.1,652 கோடியில் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக நானே வந்து திறந்து வைப்பேன்.
அ.தி.மு.க. கோட்டை
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்து புனர் அமைக்க ரூ.933 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறேன். ரூ.400 கோடியில் சித்தோடு-கோபி சாலை விரிவாக்கம் செய்ய டெண்டர் போடப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகராட்சி மற்றும் பிற நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 12 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் கொண்ட வரப்பட்டு உள்ளன. ரூ.226 கோடியில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை நான்தான் கொண்டு வந்தேன். வேறு யாராவது கொண்டு வந்ததாக சொன்னால் அதை நம்ப வேண்டாம். இதுபோல் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவையும் நான்தான் கொண்டு வந்தேன்.
ஈரோட்டில் அரசு ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் என்று கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் ஸ்டாலின் பச்சை பொய்யை கூறி வருகிறார். அம்மாவின் அரசு மக்களின் அரசு. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதுதான் அம்மாவின் அரசு. இது உங்களின் அரசு. அ.தி.மு.க. அரசு நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும்.
எனவே ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற,ு ஈரோடு எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிப்போம்.
அடுக்குமாடி வீடுகள்
நான் உங்கள் பகுதியை சேர்ந்தவன். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருக்கும் நான், முதல்-அமைச்சராக இருந்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தேடி வரலாம். என் வீட்டு கதவுகள் திறந்தே இருக்கும். நான் பவானியில் படித்தவன். 8 தொகுதியும் எனக்கு முழுமையாக தெரியும். எனவேதான் இதுவரை எந்த அரசும் செய்யாத திட்டங்களை நான் உங்களுக்காக நிறைவேற்றி இருக்கிறேன். நான் மீண்டும் முதல்-அமைச்சராக வர, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்திலும், பா.ஜனதா கட்சிக்கு தாமரை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்.
எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியபடி கிராமங்கள், நகரங்களில் சொந்த வீடுகள் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் நிலம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்கப்படும். ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் இது வழங்கப்படும். நகர்ப்புற மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படும். அரிசி அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அரிசி அட்டை தாரர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். கேபிள் கட்டணம் வசூலிக்கப்படாது.
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகைக்கடன் உள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். 18 வயது ஆன அனைவருக்கும் அரசே ஓட்டுனர் பயிற்சி வழங்கி ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தரும். நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வட்டி இல்லாத கடன் வழங்கப்படும். தொழில் தொடங்க ரூ.1 லட்சம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும். ஆட்டோ வாங்க ரூ.27 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
இதுபோன்ற திட்டங்கள் கிடைக்க எம்.ஜி.ஆர்., அம்மா ஜெயலலிதாவின் கோட்டையாக உள்ள ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
பின்னர் அவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story