துபாயில் இருந்து சென்னைக்கு முக கவசத்தில் மறைத்து கடத்தல்; ரூ.3 லட்சம் தங்கத்தகடு பறிமுதல்


துபாயில் இருந்து சென்னைக்கு முக கவசத்தில் மறைத்து கடத்தல்; ரூ.3 லட்சம் தங்கத்தகடு பறிமுதல்
x
தினத்தந்தி 2 April 2021 6:24 AM IST (Updated: 2 April 2021 6:24 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து சென்னைக்கு முக கவசத்தில் மறைத்து கடத்தி வந்த ரூ.3 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.8 லட்சம் செல்போன்கள், சிகரெட்டுகளும் சிக்கின.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா (வயது 40) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

பதற்றமாக இருந்த அவர் அணிந்திருந்த முக கவசத்தை சந்தேகத்தின் பேரில், கழற்றி பார்த்தனர். அதில் முக கவசத்தின் உள்புறம் தங்கத்தை தகடு போல் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.11 லட்சம் பொருட்கள் பறிமுதல்

இதையடுத்து, ரூ.3 லட்சம் மதிப்புள்ள 65 கிராம் தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள், பின்னர் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், சிகரெட்டுகள், லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து, ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், சிகரெட்டுகள், லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக முகமது அப்துல்லாவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story