புன்னப்பாக்கம் கிராமத்தில் ஏரியில் சவுடு மண் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு


புன்னப்பாக்கம் கிராமத்தில் ஏரியில் சவுடு மண் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 April 2021 1:27 AM GMT (Updated: 2 April 2021 1:27 AM GMT)

புன்னப்பாக்கம் கிராமத்தில் ஏரியில் சவுடு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் புன்னப்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 165 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சவுடு மண் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் தனி நபர் ஒருவருக்கு அனுமதி அளித்தது. இந்தநிலையில் சவுடு மண் எடுக்க கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் சவுடு மண் குவாரி அமைத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் அன்றைய தினம் தற்காலிகமாக சவுடு மண் குவாரி நிறுத்தப்பட்டது.

லாரிகள் சிறைபிடிப்பு

இந்த நிலையில், நேற்று காலை குவாரியில் பொக்லைன் எந்திரங்களை கொண்டு சவுடு மண் ஏற்றி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அறிந்த கிராம மக்கள் சவுடு மண் குவாரி நடைபெறும் ஏரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வெங்கல் போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் கூறிய சமரச பேச்சுவார்த்தையை பொதுமக்கள் ஏற்கவில்லை. மேலும், சவுடு மண் ஏற்றிய லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர். பின்னர் அந்த லாரி டிரைவர்கள் லாரியில் இருந்த சவுடு மண்ணை அங்கேயே கொட்டிவிட்டு வெறும் லாரியுடன் வெளியேறினர்.

கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

அதன் பின்னரும் போராட்டத்தை விலக்கி கொள்ளாத பொதுமக்கள் ஏரிக்கு செல்லும் வழியில் பள்ளம் ஏற்படுத்தி லாரிகள் உள்ளே செல்லாத அளவுக்கு தடையை ஏற்படுத்த கோரிக்கை விடுத்தனர். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசையும், அதிகாரிகளையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், சவுடு மண் குவாரி அமைத்தால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக கூறி விட்டு சென்றனர்.

Next Story