ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் நத்தம் விசுவநாதன் நம்பிக்கை


ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் நத்தம் விசுவநாதன் நம்பிக்கை
x
தினத்தந்தி 2 April 2021 5:07 AM GMT (Updated: 2 April 2021 5:07 AM GMT)

அ.தி.மு.க. 3-வது முறையாக வெற்றிபெற்று ஜெயலலிதா வழியில் நல்லாட்சி அமையும் என்று பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

செந்துறை, 

நத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தொகுதிக்கு உட்பட்ட நத்தம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். அதன்படி திருநூத்துபட்டி, திருகளத்துப்பட்டி, சித்திரைக்கவுண்டன்பட்டி, போடிக்கம்பட்டி காலனி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். 

தொடர்ந்து நத்தம் நகரில் உள்ள மீனாட்சிபுரம், கோவில்பட்டி, அண்ணாநகர், அய்யாபட்டி, மெய்யம்பட்டி, கல்வேலிபட்டி, பாப்பாபட்டி, வெள்ளக்குட்டு உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் சென்றபடி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். மேலும் செந்துறை புனித சூசைப்பர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தார். அதுபோல் குரும்பபட்டி ஸ்ரீமகாலட்சுமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள், கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக திருநூத்துபட்டியில் அவர் மக்களிடையே பேசியதாவது:-

3-வது முறையாக அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில், ஜெயலலிதா நிறைவேற்றி சென்ற நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகளால் அவரின் உருவம் இன்றளவும் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. இந்த கட்சி இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் தழைத்து நிற்கும். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என அவர் கூறிய வார்த்தைகள் மக்கள் நெஞ்சங்களில் ஆழமாக நிறைந்துள்ளது. எனவே மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று 3-வது முறையாக ஜெயலலிதா வழியில் நல்லாட்சி அமையும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்கோப்புடன் இருப்பதால் அமைதிப்பூங்காவாக காட்சி தருகிறது. 

அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், நத்தம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு சீரான குடிநீர் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500, கல்விக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, குடும்பத்துக்கு வாஷிங்மெஷின், 6 கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே நீங்கள் மறக்காமல் வருகிற 6-ந்தேதி இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்களித்து மக்கள் சேவையாற்ற 5-வது முறை வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசார நிகழ்ச்சியில் நத்தம் ஒன்றியகுழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர் சின்னு, மாவட்ட கவுன்சிலர் சின்னாக்கவுண்டர், மாணவரணி  மாவட்ட இணைச்செயலாளர் அசாருதீன், ஊராட்சி தலைவர் சவரிமுத்து, மாவட்ட விவசாய அணி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சார்லஸ், செல்வராஜ், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஆரோக்கியசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அழகாஸ்திரி கவுண்டர், தெற்கு ஒன்றிய பொருளாளர் வாசுதேவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, ஊராட்சி செயலாளர் நெல்சன், நகர செயலாளர் நாகரத்தினம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story