‘நீட்’ தேர்வுக்கு முடிவு கட்ட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் நத்தம் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
‘நீட்‘ தேர்வுக்கு முடிவு கட்ட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று நத்தத்தில் தி.மு.க. வேட்பாளர் ஆண்டிஅம்பலத்துக்கு ஆதரவாக நடந்த பிரசார கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
நத்தம்,
நத்தம் சட்டமன்ற தொகுதியில், தி.மு.க. சார்பில் எம்.ஏ.ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, கனிமொழி எம்.பி. நத்தம் பஸ் நிலையம் அருகே நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெற்றி கனவில் உள்ளனர். அந்த கனவு பலிக்காது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் காலம் மிக அருகில் நெருங்கி வந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாரதீய ஜனதா கட்சி-அ.தி.மு.க. கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகளுக்கு மாநில அரசு துரோகம் செய்து விட்டது.
‘நீட்‘ தேர்வுக்கு முடிவு கட்ட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறையில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
அரசு டவுன் பஸ்களில், இலவசமாக பயணம் செய்ய பெண்கள் அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில் 25 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அரசு பணியில் அமர்த்தப்படுவார்கள். வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
இதேபோல் நத்தத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரி, சாணார்பட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நத்தம் அருகே செந்துறையில் பஞ்சந்தாங்கி அணை, கரந்தமலை பகுதியில் தடுப்பணை ஆகியவை கட்டப்படும். ஆயத்த ஆடை உற்பத்தியை அதிகரிக்க நத்தத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். தமிழகத்தில் நல்லாட்சி அமைவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
பிரசாரத்தில் நத்தம் தொகுதி பொறுப்பாளர் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், நகர செயலாளர் முத்துக்குமாரசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story