வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்கு 1,087 போலீசார்


வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்கு 1,087 போலீசார்
x
தினத்தந்தி 2 April 2021 6:23 PM GMT (Updated: 2 April 2021 6:23 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்கு 1,087 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்கு 1,087 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகள்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகள் உள்ளன. வருகிற 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியாற்றும் போலீசாருக்கு கணினி மூலமாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொது பார்வையாளர்கள் ரவி சங்கர் பிரசாத் (தாராபுரம் மற்றும் காங்கேயம்), சந்தர் பிரசாத் வர்மா (அவினாசி), உமானந்தா டோலி (திருப்பூர் வடக்கு), மாஷீர் ஆலம் (திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம்), காவல் பார்வையாளர்கள் நிலாப் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1,087 போலீசார் நியமனம்
திருப்பூர் மாநகரம் மற்றும் ஊரக பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் ஆகியோர் பொது பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் விளக்கினார்கள்.
மாவட்டம் முழுவதும் மாநகர போலீசார் 301 பேருக்கும், ஊரக பகுதியில் 786 பேருக்கும் என மொத்தம் 1,087 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பணி நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் அனைவரும் தவறாமல் முககவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
---------

Next Story