4 தொகுதிகளுக்கான பிரசாரம் ஓய்ந்தது


4 தொகுதிகளுக்கான பிரசாரம் ஓய்ந்தது
x
தினத்தந்தி 4 April 2021 8:32 PM GMT (Updated: 4 April 2021 8:32 PM GMT)

அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் 4 தொகுதிகளுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

பெரம்பலூர்:

பிரசாரம் ஓய்ந்தது
பெரம்பலூா் மாவட்டத்தில் பெரம்பலூர்(தனி) தொகுதியில் 9 வேட்பாளர்களும், குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்களும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தொகுதியில் 13 வேட்பாளர்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 13 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 2 மாவட்டங்களிலும் சேர்த்து அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் அவற்றின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வீதி, வீதியாக நடந்து சென்றும், திறந்த வாகனத்தில் சென்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
அரியலூர்
இதையொட்டி நேற்று காலை முதலே வேட்பாளர்கள், கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் புடைசூழ, பறை இசை, மேளதாளங்கள் முழங்க, ஆடல், பாடலுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று, இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு, பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதில் அரியலூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் அரியலூர் நகரில் வீதி வீதியாக ஊர்வலமாக சென்று, பஸ் நிலைய நுழைவு வாயிலில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு முன்பு பிரசாரத்தை நிறைவு செய்தார். அரியலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பா, அரியலூரில் வாரச்சந்தை பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பாலு, நேற்று ஜெயங்கொண்டம் நகர பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். தி.மு.க. வேட்பாளர் க.சொ.க.கண்ணன் ஜெயங்கொண்டம் ஆதிபராசக்தி கோவில் அருகே தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் பஸ் நிறுத்தத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். தி.மு.க. வேட்பாளர் பிரபாகரன் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
குன்னம்
குன்னம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து, செந்துறை கிராமத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார். தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரும் செந்துறை கிராமத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளரான திரைப்பட இயக்குனர் கவுதமன், குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் கிராமத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

Next Story