2 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


2 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 9:26 PM GMT (Updated: 6 April 2021 9:26 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

பெரம்பலூர்:

2 தொகுதிகளுக்கான தேர்தல்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி, பெரம்பலூர் தொகுதியில் 1,47,434 ஆண் வாக்காளர்களும், 1,52,236 பெண் வாக்காளர்களும், 22 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 3,02,692 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் தொகுதியில் 1,35,097 ஆண் வாக்காளர்களும், 1,38,351 பெண் வாக்காளர்களும், 13 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2,73,461 வாக்காளர்கள் உள்ளனர்.
பெரம்பலூர் தொகுதியில் 9 வேட்பாளர்களும், குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளதால், வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடிகளும், குன்னம் தொகுதிக்கு 388 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 816 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.
ஓட்டுப்பதிவு
ஓட்டுப்பதிவிற்காக பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடிகளுக்கு 20 சதவீத இருப்புடன் 514 வாக்குப்பதிவு எந்திரங்களும், 514 கட்டுப்பாட்டு கருவிகளும், 28 சதவீத இருப்புடன் 548 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்களும், 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் குன்னம் தொகுதியில் 388 வாக்குச்சாவடிகளுக்கு 20 சதவீத இருப்புடன் 930 (ஒரு வாக்குப்பதிவு மையத்திற்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம்) வாக்குப்பதிவு எந்திரங்களும், 465 கட்டுப்பாட்டு கருவிகளும், 28 சதவீத இருப்புடன் 497 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்களும் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது.
பெரம்பலூர்-குன்னம் ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்காளர் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் சீல்களை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உடைத்து, அதனை ஒவ்வொன்றுடன் பொருத்தி ஓட்டுப்பதிவிற்கு தயார் நிலையில் வைத்தனர்.
நீண்ட வரிசையில் நின்று...
ஓட்டுப்பதிவு தொடங்கியவுடன் நிறைய பேர் ஆர்வத்துடன் தங்களது வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்தனர். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளருக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. பின்னர் வாக்காளரின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வாக்காளருக்கு வலது கையில் அணிய பாலீத்தின் கையுறை வழங்கப்பட்டது. மேலும் முக கவசம் அணிந்து வரும் வாக்காளர்களை மட்டும் வாக்குச்சாடிக்குள் அலுவலர்கள் அனுமதித்தனர். வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்தனர்.
இதனால் காலையிலேயே நிறைய வாக்குச்சாவடி மையங்களில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து சென்றதை காணமுடிந்தது. வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் சின்னம் அருகே உள்ள பொத்தானை அழுத்தியவுடன் பீப் என்ற சத்தம் ஒலித்தது. அதன்பிறகு வி.வி.பேட் எந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண்ணும், சின்னமும் அடங்கிய ஒப்புகை சீட்டு, அந்த எந்திரத்தின் கண்ணாடி வழியாக வெளியே தெரிந்தது. அதனை வாக்காளர்கள் பார்வையிட்டனர். முன்னதாக வாக்களித்தற்காக அடையாளமாக வாக்காளர்களின் இடது கையின் ஆட்காட்டி விரலில் அழியாத மை இடப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ‘சீல்’
பகல் நேரத்தில் வெயில் கடுமையாக கொளுத்தியதால் வாக்காளர்கள் நிறைய பேர் காலை 11 மணிக்கு முன்பாக வந்த தங்களது வாக்கினை பதிவு செய்தனர். பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா, கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திரன், பெரம்பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், சப்-கலெக்டருமான பத்மஜா ஆகியோர் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அந்த மையம் உள்பட பல்வேறு வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் அதிகாரி ஸ்ரீவெங்கடபிரியா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓட்டு போட்டார்.
காலையில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்கள் வாக்கினை உறுதி செய்யும் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை வாக்குச்சாவடி அலுவலர்கள் வேட்பாளர்களின் பூத் ஏஜென்டு முன்னிலையில் சீல் வைத்தனர்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு...
பின்னர் பெரம்பலூர் தொகுதியில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்கள் வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும் லாரிகளில் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், குன்னம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்கள் வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும் லாரிகளில் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் அனுப்பப்பட்டது. 
பெரம்பலூர் சட்டமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட சர்க்கரை ஆலை எறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட நேரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் நரிக்குறவர்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர். வாலிகண்டபுரத்தில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்காளர்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் நகரத்தை விட கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

Next Story