ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 6 April 2021 10:47 PM GMT (Updated: 6 April 2021 10:50 PM GMT)

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

ஊட்டி,

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்துக்கு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வழக்கமாக அதிகம் பேர் வருகின்றனர். 

மேலும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருகை தருகிறார்கள். இந்த நிலையில் நேற்று தமிழகம், கேரளாவில் சட்டமன்ற தேர்தலையொட்டி தங்களது தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது. 

குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து இருந்தனர். அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் புல்வெளிகளில் அமர்ந்து கண்டு ரசித்தனர். கடந்த 4-ந் தேதி 7 ஆயிரத்து 430 பேர், நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 517 பேர், நேற்று 1,700 பேர் மட்டும் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர்.

சட்டமன்ற தேர்தல், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை, கொரோனா கட்டுப்பாடு போன்ற காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, படகு இல்லம், தேயிலை பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது. 

மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட எல்லைகளில் கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இ-பதிவு செய்தவர்களுக்கு மட்டும் நீலகிரிக்குள் வர அனுமதி வழங்கப்படுகிறது.


Next Story