வாக்குப்பதிவு எந்திரங்களை வரிசை மாற்றி வைத்ததாக புகார்: வாக்குச்சாவடி முன்பு சுயேச்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தர்ணா


வாக்குப்பதிவு எந்திரங்களை வரிசை மாற்றி வைத்ததாக புகார்: வாக்குச்சாவடி முன்பு சுயேச்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தர்ணா
x
தினத்தந்தி 7 April 2021 12:30 AM GMT (Updated: 7 April 2021 12:30 AM GMT)

வாக்குப்பதிவு எந்திரங்களை வரிசை மாற்றிவைத்துவிட்டதாக புகார் கூறி வாக்குச்சாவடி முன்பு சுயேச்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெருந்துறை
வாக்குப்பதிவு எந்திரங்களை வரிசை மாற்றிவைத்துவிட்டதாக புகார் கூறி வாக்குச்சாவடி முன்பு சுயேச்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 
சுயேச்சை வேட்பாளர்
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் சீட் கிடைக்கவில்லை. அதனால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு தென்னந்தோப்பு சின்னம் வழங்கப்பட்டு இருந்தது.  
இந்தநிலையில் நேற்று காலை தோப்புபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஓட்டுப்போட்டார். பின்னர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பெருந்துறை ஒன்றியம், பொன்முடி ஊராட்சி, சர்க்கரை கவுண்டன்பாளையம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டார்.
தர்ணா போராட்டம்
அதைத்தொடர்ந்து அவர் வாக்குப்பதிவு அலுவலரிடம் சென்று, இங்குள்ள 2 வாக்குப்பதிவு எந்திரங்களை இடம் மாற்றி வைத்துள்ளீர்கள். இதனால், எனக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் எந்த எந்திரத்தில் இருக்கிறது? என்பதே தெரியவில்லை. இதனால் எனது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று புகார் கூறினார். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை முறைப்படி வரிசையாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 அதற்கு பதிலளித்த வாக்குச்சாவடி அலுவலர், தொழில்நுட்ப வசதிக்காக எந்திரங்களை மாற்றி வைத்துள்ளோம். இதனால் உங்களது சின்னம் எந்த வகையிலும் வாக்காளர்களுக்குத் தெரியாமல் போகாது என்று கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த தோப்புவெங்கடாசலம் வாக்கு பதிவு எந்திரங்களை வரிசைப்படி வைக்கும்வரை, இங்கிருந்து போகமாட்டேன் என்று கூறி வாக்குச்சாவடி நுழைவு வாயிலின் முன்பு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை தொகுதி உதவி தேர்தல் அலுவலர் கார்த்திகேயன்,  துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தோப்பு வெங்கடாசலத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு வாக்குப்பதிவு எந்திரங்களை முறைப்படி வரிசையாக வைத்தனர். அதன் பின்னரே சமாதானம் அடைந்த தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக அங்கு சுமார் 50 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

Next Story