சென்னையில் வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்ட போலீஸ் கமிஷனர்


சென்னையில் வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்ட போலீஸ் கமிஷனர்
x
தினத்தந்தி 7 April 2021 5:15 AM GMT (Updated: 7 April 2021 5:15 AM GMT)

போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாக்குச்சாவடிகளை நேரில் சென்று பார்வையிட்டார். சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 2 கார்களை பறிமுதல் செய்ய அவர் உத்தரவிட்டார்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அவர்வால், நேற்று காலையில் திருவல்லிக்கேணி எல்லீஸ்புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவி வனிதா அகர்வால், மகள் அக்ஷிதா அகர்வால் ஆகியோருடன் சென்று ஓட்டு போட்டார். பின்னர் அவர் சென்னையில் பல்வேறு தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். வாக்காளர்கள் கொரோனா தடுப்பு முறைகளை கடைபிடிக்கிறார்களா என்பதையும் அவர் ஆய்வு செய்தார். முககவசம் அணியாமல் வந்த வாக்காளர்களுக்கு தன்னிடம் வைத்திருந்த முககவசத்தை வழங்கினார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்களையும், பிஸ்கட் பாக்கெட்டுகளையும் கொடுத்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வாக்குச்சாவடி, மயிலாப்பூர் உருது பள்ளி, சாந்தோம் உயர்நிலைப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம் ராணிமெய்யம்மை பெண்கள் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

மயங்கி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர்

லாயிட்ஸ்காலனி பகுதியில் வாக்குச்சாவடி அருகே உரிய அனுமதி இல்லாமல் கார் ஒன்று சந்தேகத்துக்கிடமாக சுற்றிக்கொண்டிருந்தது. அந்த காரை பறிமுதல் செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். அந்த கார் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் கார் என்று தெரிய வந்தது. இதுபோல ராயபுரம் பகுதியிலும் அனுமதி பெறாமல் வாக்குச்சாவடி அருகே சுற்றிக்கொண்டிருந்த காரையும் பறிமுதல் செய்யும்படி அவர் ஆணை பிறப்பித்தார்.

இந்த நிலையில், சென்னை ராயபுரம் பழைய ஆட்டுத்தொட்டி பகுதியில் உள்ள 131-வது வாக்குச்சாவடியில் பாதுகாப்புப்பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் திடீரென்று வாக்குச்சாவடியில் மயங்கி விழந்தார். அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

Next Story