வாக்குச்சாவடியில் தி.மு.க.வினருடன் வாக்குவாதம்; அமைச்சர் பென்ஜமின் மீது போலீசார் வழக்கு


வாக்குச்சாவடியில் தி.மு.க.வினருடன் வாக்குவாதம்; அமைச்சர் பென்ஜமின் மீது போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 8 April 2021 1:00 AM GMT (Updated: 2021-04-08T06:30:15+05:30)

வாக்குச்சாவடியில் வாக்குவாதம் செய்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் அமைச்சர் பென்ஜமின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசில் புகார்
சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் பென்ஜமின், வாக்குப்பதிவு நடைபெற்ற நேற்று முன்தினம் முகப்பேரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.அப்போது அங்கிருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச் சர் பென்ஜமின், தி.மு.க.வினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அமைச்சர் பென்ஜமின், ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தி.மு.க.வினர் அராஜகம்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முகப்பேர் கிழக்கு, வீரமாமுனிவர் தெருவில் உள்ள பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஆய்வு செய்ய சென்றபோது, அங்கிருந்த தி.மு.க.வினர் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதை கண்டேன்.இது சம்பந்தமாக அங்கிருந்த தி.மு.க. நிர்வாகிகள் நவராஜ், நவசுந்தர் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், எனது காரை வழிமறித்து தாக்கவும் முற்பட்டனர்.இதுகுறித்து ஏற்கனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் புகார் அளித்து உள்ளேன். தற்போது போலீஸ் நிலையத்திலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

பென்ஜமின் மீது வழக்கு
இதேபோல் தி.மு.க. மதுரவாயல் வடக்கு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் நவராஜ், ஜெ.ஜெ.நகர் போலீசில் மற்றொரு புகார் அளித்தார். அதில் அவர், தன்னையும், தன்னுடன் இருந்த தி.மு.க. மற்றும் பொதுமக்களையும் அமைச்சர் பென்ஜமின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, மதவெறியை தூண்டும் வகையில் பேசினர். தேர்தல் நடத்தை விதிக்கு மாறாக செயல்பட்ட பென்ஜமின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நட வடிக்கை எடுக்குமாறு கூறி இருந்தார்.இருதரப்பினரும் அளித்த புகார்களின் மீது விசாரணை நடத்திய ஜெ.ஜெ..நகர் போலீசார், பென்ஜமின் கொடுத்த புகாரின்பேரில் தி.மு.க.வைச் சேர்ந்த நவராஜ், நவசுந்தர் மற்றும் சில நிர்வாகிகள் மீதும், தி.மு.க.வினர் அளித்த புகாரின்பேரில் அமைச்சர் பென்ஜமின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story