பெண் புகாரால் மனஉளைச்சல்: ஆடியோ வெளியிட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் தற்கொலை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பரபரப்பு


பெண் புகாரால் மனஉளைச்சல்: ஆடியோ வெளியிட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் தற்கொலை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 April 2021 2:22 PM GMT (Updated: 2021-04-08T19:52:09+05:30)

தேவாரம் அருகே, பெண் புகாரால் மன உளைச்சல் அடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்வதற்கு முன் வெளியிட்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தே.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் திருப்பதி வாசன் (வயது 49). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் 18-ம் கால்வாய் விவசாய சங்க செயலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு லாலி (42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதிவாசன் மீது அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் தேவாரம் போலீசார் திருப்பதிவாசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்(பி.சி.ஆர்.) வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 
தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோம்பை சுக்குசுல்லிமேடு அருகே உள்ள கல்குவாரி பகுதியில் ஒரு மரத்தில் திருப்பதிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று காலை கோம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
சமூக வலைத்தளங்களில் வைரல்
இதனிடையே தற்கொலை செய்வதற்கு முன் திருப்பதிவாசன், தான் பேசிய ஆடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரசியல் பிரமுகர்கள் 2 பேர் தூண்டுதலின் பேரில் என் மீது பி.சி.ஆர். வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு, என் மீது எந்த குற்றமும் இல்லை. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணை பொதுவெளியில் தவறாக பேசவில்லை. இதுகுறித்து மாவட்ட காவல் துறையும், நீதித்துறையும் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கால் எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளேன். 
எனக்கும், அந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் நான் அவருக்கு வாஷிங் மெஷின், ஏர்கூலர், பிரிட்ஜ், ஸ்கூட்டர் ஆகியவற்றை என் சொந்த பணத்தில் வாங்கி கொடுத்துள்ளேன். இது குறித்த தகவல்களை எல்லாம் எனது கம்ப்யூட்டரில் குறித்து வைத்து இருக்கிறேன். எனக்கும், அந்த பெண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து அவரது செல்போன் எண், எனது செல்போன் எண் ஆகிய இரண்டையும் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். 
இதில் வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்கள் மூலம் உண்மை நிலை தெரியும். எனவே நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. Next Story