நோணாங்குப்பம் படகு குழாமில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு


நோணாங்குப்பம் படகு குழாமில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு
x
தினத்தந்தி 8 April 2021 4:39 PM GMT (Updated: 8 April 2021 4:39 PM GMT)

நோணாங்குப்பம் படகு குழாமில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார்.

அரியாங்குப்பம், ஏப்.8-
நோணாங்குப்பம் படகு குழாமில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார்.
படகு குழாம்
அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாமில் இயங்கி வருகிறது. இங்கு  கவர்னர் தமிழிசை   சவுந்தரராஜன் அதிகாரிகளுடன் வந்து  ஆய்வு செய்தார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து அவர் காரில் படகு குழாம் வந்தார். அவருக்கு படகு குழாம் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் படகு குழாமில் இருந்து சுண்ணாம்பாற்றில் படகு சவாரி செய்து பாரடைஸ் பீச்சுக்கு சென்றார். அங்கு குடிநீர் குழாய் சேதமடைந்திருந்ததை பார்த்த கவர்னர், அதனை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிழற்குடைகள் அமைக்க உத்தரவு
கோடை வெயிலின் தாக்கத்தில் இளைப்பாற சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவாக நிழற்குடைகள் கூடுதலாக அமைக்க வேண்டும். உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அதிகாரிகளை கவர்னர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது படகு குழாம் ஊழியர்கள், நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் ஊழியர்களை நியமிக்கவேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதியளித்தார்.
கைவினை நகரம்
முன்னதாக முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தயாரிக்கப்படும் கைவினை பொருட்களை அவர் பார்வையிட்டு, அதனை தயாரித்த தொழிலாளர்களை பாராட்டினார். இந்த ஆய்வின்போது கவர்னர் மாளிகை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story