கொரோனாவால் போதிய வருமானம் கிடைக்காததால் கார் உரிமையாளர் தற்கொலை


கொரோனாவால் போதிய வருமானம் கிடைக்காததால் கார் உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2021 5:40 PM GMT (Updated: 2021-04-08T23:10:02+05:30)

கொரோனாவால் போதிய வருமானம் கிடைக்காததால் கார் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கிணத்துக்கடவு

கொரோனாவால் போதிய வருமானம் கிடைக்காததால் கார் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கார் உரிமையாளர் 

கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 42). இவருடைய மனைவி சங்கீதா (36). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். 

ரவிக்குமார் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கொரோனா தாக்கம் காரணமாக, காருக்கு சரிவர சவாரி கிடைக்கவில்லை. 

போதிய வருமானம் இல்லை 

இதனால் போதிய வருமானம் இன்றி தவித்த அவர் கடந்த 4 மாதங்களாக தனது காருக்கு வாங்கிய கடனுக்கு மாத தவணை கட்ட முடியாமலும், குடும்ப செலவுக்கு பணம் இல்லாமலும் தவித்து வந்தார். 

இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் உள்ளவர்களிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வீட்டில் உள்ள மொட்டை மாடிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து ரவிக்குமாரின் இருமல் சத்தம் அதிகமாக கேட்டது. 

உடனே சங்கீதா அங்கு சென்று பார்த்தபோது அவர் வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தார். 

தற்கொலை 

இதனால் அவர் ஏன், வாந்தி எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தைலத்தை குடித்துவிட்டதாக தெரிவித்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரவிக்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். 

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவிக்குமார் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story