மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலி; கணவன்-மனைவி படுகாயம்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார் மோதிய விபத்தில் மற்றொரு கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கிழக்கு கடற்கரைச்சாலை
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பெரிய நத்தம் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 22). புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் என்ற பிரேம்குமார் (25). நண்பர்களான இருவரும், அதே பகுதியை சேர்ந்த தங்களின் மற்றொரு நண்பரான அப்துல்ரசாக் (25), அவரது மனைவி ஸ்வேதா (22) ஆகியோருடன் செங்கல்பட்டில் இருந்து ஒரு காரில் சென்னைக்கு சென்றனர்.
அதன் பின்னர், நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் கிழக்குக்கடற்கரை சாலை வழியாக அதே காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். மாமல்லபுரம் அருகே பேரூர் என்ற இடத்தில் அங்குள்ள வளைவில் காரை இடது பக்கமாக திருப்ப முயன்றனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் இவர்கள் வந்த காரின் மீது மோதியதில் அஜய் உள்ளிட்டோர் சென்ற கார் அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
2 பேர் பலிஇதில் அந்த கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி ஒரே காரில் வந்த அஜய், பிரேம்குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். காயமடைந்த அப்துல்ரசாக், ஸ்வேதா ஆகிய இருவரும் செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும், இந்த விபத்தில் விபத்தை ஏற்படுத்திய காரும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அதில், வந்த 2 பேரும் எவ்வித காயமின்றி உயிர் தப்பினர்.