காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசும்போது,
பொதுஇடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதையும், அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைப்பிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய் துறையினர் கண்காணிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும். காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய வேண்டும். கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் வேண்டும்.
மேலும், மக்கள் அதிகமாக கூடும் கலாசார, வழிபாட்டு தலங்களில் முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பழனி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.