முற்றுகை போராட்டம் எதிரொலி; அதிகாரிகளின் அனுமதியுடன் செயல்பட்ட கோயம்பேடு சில்லரை காய்கறி கடைகள்; வியாபாரிகள் மகிழ்ச்சி
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், அதிகாரிகள் அனுமதியுடன் கோயம்பேடு சில்லரை காய்கறி கடைகள் செயல்பட்டன.
வியாபாரிகள் போராட்டம்
கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுப்பதற்கு சில கட்டுப்பாடுகளை அரசு பிறப்பித்து இருக்கிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவலுக்கு முக்கிய மையமாக இருந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை காய்கறி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு சில்லரை காய்கறி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சுழற்சி முறையில் நாளை (திங்கட்கிழமை) வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
கடைகள் செயல்பட்டனஅதன்படி, கோயம்பேடு சில்லரை காய்கறி கடைகள் நேற்று வழக்கம்போல் செயல்பட்டன. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் தொடர்ந்து கடைகள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த வண்ணம் இருக்கின்றனர்.
நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் அதனை விற்பனை செய்வதற்காக வாங்க வந்திருந்த வியாபாரிகளின் வாகனங்கள் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. மேலும், அவர்களின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது.
கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து வந்தாலும், சில கடைகளில் வியாபாரிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணிவதில் தயக்கம் காட்டியபடி இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் சிலர் முன்வைக்கின்றனர்.
நாளை மீண்டும் பேச்சுவார்த்தைசுழற்சி முறையில் கடைகளைத் திறந்தால், 2 கடைகளில் காய்கறி வாங்க வரும் வியாபாரிகள், பொதுமக்கள் ஒரே கடையில் கூடத்தான் செய்வார்கள். அதுவும் கூட்டத்தை கூட்டவே வழிவகுக்கும். எனவே அனைத்து கடைகளையும் ஒரே நாளில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படும் அதே நேரத்தில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மூடப்பட்டபோது, திருமழிசையில் செயல்பட்டது. அப்போது மாநகராட்சி நிர்வாகம் பின்பற்றிய நடவடிக்கைகளை, தற்போது கோயம்பேடு மார்க்கெட் சில்லரை கடைகளிலும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்றும் அவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அதிகாரிகளுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். அதன் பின்னர்தான் இறுதியான முடிவு தெரிய வரும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.