ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையாடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.
போலீசார் விரட்டி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் செய்யார் அடுத்த பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வம் (வயது 19) என்பது தெரிய வந்தது. அவரை சோதனை செய்ததில் அவரிடம் 1 கிலோ 600 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் வடமாநிலத்தவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் தமிழ்செல்வனை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்றதாக தமிழ்செல்வனை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த தமிழ்செல்வன் மீண்டும் கஞ்சா விற்று போலீசில் மாட்டிக்கொண்டது குறிப்பிடதக்கது.