கடந்த 7 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு 6.3 சதவீதம் அதிகரிப்பு மாநகராட்சி தகவல்
சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 6.3 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி மீண்டும் பழைய நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. அந்தவகையில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்தல், காய்ச்சல் முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் சென்னையில் கடந்த 7 நாட்களில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு 6.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் அதிகபட்சமாக 14.3 சதவீதமும், தண்டையார்பேட்டையில் 13.5 சதவீதமும், திருவொற்றியூர் மண்டலத்தில் 12.2 சதவீதமும் அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
அதேபோல் பெருங்குடியில் 8.4 சதவீதம், ராயபுரத்தில் 7.8 சதவீதம், தேனாம்பேட்டையில் 7.6 சதவீதம், திரு.வி.க. நகரில் 6.3 சதவீதம், ஆலந்தூரில் 6.1 சதவீதம், மாதவரத்தில் 6 சதவீதமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோடம்பாக்கத்தில் 6 சதவீதம், மணலியில் 5.9 சதவீதம், அடையாறில் 5.5 சதவீதம், அண்ணாநகரில் 5 சதவீதம், வளசரவாக்கத்தில் 2.9 சதவீதம், அம்பத்தூரில் 1.6 சதவீதமும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 278 பேர் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்துள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையை பொருத்தவரை சென்னையில் 10 லட்சத்தை நெருங்கி உள்ளது.
மேற்கண்ட தகவல் அனைத்தும் சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story