கோபுராஜபுரம் ஊராட்சி அருகே ஆற்றில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் பொதுமக்கள் பீதி


கோபுராஜபுரம் ஊராட்சி அருகே ஆற்றில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 12 April 2021 10:45 PM IST (Updated: 12 April 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

கோபுராஜபுரம் ஊராட்சி அருகே பிராவடையான் ஆற்றில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

திட்டச்சேரி, 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோபுராஜபுரம் ஊராட்சி அருகில் பிராவடையான் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் மருத்துவ கழிவுகளான ஊசிகள், அறுவை சிகிச்சைக்கு உபயோகப்படுத்தும் டியூப்கள், நோயாளிகளுக்கு பொருத்தப்படும் சிறுநீர் வெளியேற்றும் குழாய்கள், மற்றும் ட்ரிப்ஸ் ஊசிகள், பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் ஆற்றின் கரையோரத்தில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் சூழலில் இதுபோன்ற மருத்துவ கழிவுகள் தொடர்ந்து இரவு நேரங்களில் ஆற்றில் கொட்டப்பட்டு வருவதால் கோபுராஜபுரம் ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கொரோனா ெதாற்று

இரவு நேரங்களில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவுகள் எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கோபுராஜபுரம், குத்தாலம், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நோய்த்தொற்று ஏற்படும் என்று அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். தற்போது கொேரானோ தொற்று அதிகம் பரவி வருகிறது. இந்த மருத்துவ கழிவுகள் கொரோனா நோய் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திய மருத்துவ கழிவுகளாக இருக்குமோ என்ற அச்சம் உள்ளது. எனவே இந்த மருத்துவக் கழிவுகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. எவ்வாறு இங்கு கொட்டப்படுகிறது என்பதை கண்டறிந்து இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story