ரெயில் பயணத்தின்போது பயணிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
ரெயில் பயணத்தின்போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பயணிகள் ரெயில் பயணத்தின்போது கட்டாயம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா 2-வது அலை கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் சவாலாக இருந்து வருகிறது. தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில்களில் பாதுகாப்பான பயணத்திற்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளை கேட்டுக்கொள்கிறது.
அந்த வகையில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கை சுகாதாரம் போன்ற அடிப்படை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். தேவையற்ற பயணம் மற்றும் குழுக்களாக பயணம் செய்வதை தவிர்க்கவும்.
சமூக இடைவெளி
டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் தளங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் ரெயில் பயணத்தை பயணிகள் தவிர்க்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவுக்காக காத்திருப்பவரானால் அல்லது தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டால் அல்லது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பயணத்தை தவிர்க்கவும்.
கொரோனா பரவலை தடுக்க கை சுத்திகரிக்கும் கிருமி நாசினிகள், உணவு, நீர் போன்றவற்றை பயணத்தின் போது பயணிகள் எடுத்துச்செல்ல வேண்டும். பயணிகள் அனைவரும் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பயணத்தின்போது பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் அசுத்தமான அல்லது சுகாதாரமற்ற எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது.
வெளிமாநில பயணிகள்
வெளிமாநிலங்களில் இருந்து தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரும் பயணிகள் இ-பாஸ், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற நெறிமுறைகளை பயணத்தின்போது கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story